Image

http://www.pustaka.co.in

லப்... டப்... லதா! லதா!

Lup… Tup… Latha! Latha!

Author:

தேவிபாலா

Devibala

For more books

http://www.pustaka.co.in/home/author/devibala-novels

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

பொருளடக்கம்

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

அத்தியாயம் 3

அத்தியாயம் 4

அத்தியாயம் 5

அத்தியாயம் 6

அத்தியாயம் 7

அத்தியாயம் 8

அத்தியாயம் 9

அத்தியாயம் 10

அத்தியாயம் 11

அத்தியாயம் 12

அத்தியாயம் 13

அத்தியாயம் 14

அத்தியாயம் 15

அத்தியாயம் 16

அத்தியாயம் 17

அத்தியாயம் 18

1

டிசம்பர் பனி விடியலைத் தாமதப்படுத்தியிருந்தது. புற்கள் பனிப்பூவை தலையில் சூடிக்கொண்டு குளிர்ச்சியாக மலரத் தொடங்கியிருந்தது.

பெசன்ட் நகரின் ஈசான மூலையில் இருந்த அந்த பங்களாவுக்குள் மாடியிலுள்ள மூன்றாவது அறையில் டெலிபோன் ஒலித்தது.

ரத்தச் சிவப்பு தாரிவால் கம்பளிப் போர்வைக்குள் ஷ்யாம். முனகிக் கொண்டே போர்வையை மார்புக்கு இறக்கிய அவனுக்கு வரும் ஜனவரியில் 28 வயது முடியும். டெலிபோனை எடுத்து பேசட்டும். முடிந்த பின்பு மீதி வர்ணனை.

"ஷ்யாம் ஹியர்!”

“நான் டாடி பேசறேன் ஷ்யாம்!”

“எங்கேயிருந்து டாடி இந்த விடிகாலைல?”

“நான் நேத்து வீட்டுக்கே வரலை. நம்ம கடையிலேருந்து பேசறேன். நீ உடனே புறப்பட்டு சரியா ஏழரைக்கெல்லாம் மீனம்பாக்கம் ஏர்போர்ட்ல இருக்கணும்.”

“எதுக்கு டாடி?”

“நியூயார்க்லேருந்து மிஸ்டர் லாரென்ஸ் வர்றார். அடையாளம் சொல்றேன் குறிச்சுக்கோ. அவரை ரிசீவ் பண்ணி, ஹோட்டல் அம்பாஸ்டர் பல்லாவல கொண்டு வந்து சேர்க்கணும். அங்கே அவருக்கு சூட் புக் ஆகியிருக்கு.

“என்ன டாடி விஷயம்?”

“சொன்னதை மட்டும் செய் ஷ்யாம். ஸம்திங் பிஸினஸ். ஓக்கே?”

டாடி சென்ன அடையாளத்தைக் குறித்துக் கொண்ட ஷ்யாம், வறுத்த முந்திரிப் பருப்பின் நிறத்தில் இருந்தான் லேசான செம்பட்டை கேசம், கச்சிதமான உடம்பு, அளவான உயரம், சுருக்மாகப் பெண்களை காமவசப்படுத்தும் தேகம்.

நகரின் பிரபல வைர வியாபாரி ஜீவன் ராமின் ஒரே பிள்ளை மைனஸ் அம்மா. உடன் பிறந்தவர்களும் இல்லை. தத்தித் தடவி பட்டப் படிப்பை முடிப்பதற்குள் சலித்துவிட்டான். டாடி தரும் ஒரு நாளைய பாக்கெட் மணி இருநூறு ரூபாய், போதாமல் போராடிக் கொண்டிருக்கிறான். அவரோடு உட்கார்ந்து தொழிலை கவனிக்கப் பொறுமையில்லை.

அவ்வப்போது இது போன்ற உதவிகள்.

குளியல் முடித்து, சிலேட்டுக் கலர் டீ ஷர்ட்டும், க்ரீம் கலர் ஜீன்ஸும் அணிந்து, தன் கரும் பச்சை மாருதியில் நுழைந்து இயக்கினான். சான்சவர் சிகரெட் உதட்டை விரும்ப, ஷாம்பு கேசம் கண்டிஷனை மீறி காற்றில் அலைந்தது.

சரியாக ஏழு பதினைந்துக்கு விமான நிலையத்தில் தன் மாருதிக்கு தற்காலிக ஓய்வு கொடுத்து விட்டு, லவுன்சில் கால் பதித்தான்.

ஆக்ஸ்போர்டு ஆங்கிலம் நாவில் மிதக்க, மினி ஸ்கர்ட் அணிந்து கால்மேல் கால் போட்டு, உஷ்ணத்தை அதிகப்படுத்தினாள் ஒரு மங்கை.

அறிவிப்பைத் தர ஒலிப்பெருக்கி கமறியது.

ஏர் இண்டியா விமானம் தன் வரவை ஆங்கிலத்தில் அறிவிப்பாளர் மூலம் ஒலிபரப்ப –

லவுன்ச் பரபரப்பானது.

ஷ்யாம் நிதானமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் அந்தப் பெண்ணை.

விமானம் தரை தொட்டு, எஸ்கலேட்டர் பொருத்தப்பட்டு, பயணிகளை பிரசவிக்க -

பார்வையைத் தீட்டிக் கொண்டான் ஷ்யாம்.

டாடி சொன்ன -

தங்க நிற கேசம், ஒல்லியான உருவம், பால் கோவா நிறம், பூனை விழிகள், முகவாயில் தழும்பு சகலமும் கொண்ட அந்த லாரன்ஸ் லவுன்சை எட்டிப்பிடிக்க, கஷ்டம்ஸ் சோதனைகள் முடிந்து வெளியில் வரும்போது, ஷ்யாம் தன் பொறுமையைத் தொலைத்திருந்தான்.

அருகே சென்று அறிமுகப்படுத்திக் கொண்டான்.

'உட்ஷீபி... இட்ஷீபி...' என்று அமெரிக்கன் ஆங்கிலத்தில் அந்த லாரன்ஸ் உற்சாகமாக உளற, எரிச்சலுடன் பார்த்தான் ஷ்யாம். உள்ளூர் ஆங்கிலமே ஷ்யாமுக்கு கொஞ்சம் நெருடல் தான்.

தன் மாருதியில் ஓட்டல் அம்பாஸடர் பல்லாவாவில் அவனைக் கொண்டு போய் சேர்த்து, அட்டகாசமான டீலக்ஸ் சூட்டில் இருத்திவிட்டு, ரிசப்ஷனில் வந்து டாடிக்கு போன் செய்தான்.

“கொண்டு வந்து சேர்த்தாச்சு டாடி! என்னை ஆளை விடறீங்களா? அந்தப் பூனை முழியன் பேசறது ஒண்ணுமே புரியலை எனக்கு!”

“சரி நீ போ ஷ்யாம். இனிமே நான் பார்த்துக்கறேன்!”

ஷ்யாம் நிம்மதியாக விசிலடித்தபடி வெளியேறினான்.

லாரன்ஸ் குளியல் முடித்து, தன்னைத் தயாரித்துக் கொண்ட இருபதாவது நிமிடம் கதவு ஓசைப்பட்டது.

"யெஸ், கமின்!”

ஜீவன்ராம் தன் கனமான தொப்பையை உள்ளே அனுப்பிவிட்டு, தானும் பின்னால் வந்தார். வெள்ளை நிற பைஜாமா, ஜிப்பா அணிந்து, தங்க பிரேமிட்ட மெலிதான மூக்குக் கண்ணாடி முகத்தில் இடம் பிடித்திருக்க, கல்கத்தா விசுவநாதன் போல இருந்தார்.

அறிமுகம் ஆனதும், லாரன்சுக்கு இணையான ஆங்கிலத்தில் சரளமாகப் பேசத் தொடங்கினார்.

“சரி லாரன்ஸ் விஷயத்துக்கு வருவோம். மொத்தம் எட்டு ஸ்டோன். பேரு 'அக்வா எமரால்ட்' இது மாதிரியான வைரங்கள் உலகத்துலேயே மொத்தம் பதினாலு கற்கள் தானாம். அதுல எட்டு இப்ப என் கையில்!”

“எப்படி கிடைச்சது?”

“அது உங்களுக்கு அவசியமில்லை. நான் வைர வியாபாரி. எனக்குப் பல வழிகள். ஒரு கல்லுக்கு கோடி ரூபாய். எட்டு கோடி ரூபாய் மொத்தக் கல்லுக்கும்!”

“வாவ்!”

“நீங்க விரும்பினா எடுத்துக்கலாம். இதை வாங்க இன்னும் நாலுப் பார்ட்டி ரெடியா இருக்கு. அதிக விலை தந்தும் வாங்கத் தயார். பட், நீங்க என் கஸ்டமர். ஸோ, முதல் வாய்ப்பு உங்களுக்கு!”

“ஓகே மிஸ்டர் ஜீவன். பணம் பத்தி பிரச்னை எனக்கில்லை. ஐவில் கிவ் யூ ஹாட் கேஷ் ரைட் நெள... ஆனா கஸ்டம்ஸ் பிரச்னை இல்லாம எப்படி என் தேசத்துக்கு அதை நான் கொண்டு போறது?”

“அதுக்கு நான் பொறுப்பு!”

மெட்டல் டிடெக்டர் முதல்கொண்டு சகலமும் 'செக்யூரிட்டி செக்'ல உண்டு!

அது எனக்கும் தெரியும் லாரன்ஸ். சகல கஸ்டம்ஸ் சோதனைகளுக்கும் 'பெப்பே' காட்டற வழிகளை நான் வச்சிருக்கேன். கையை வீசிட்டு, உங்க வீடு வரைக்கும் நீங்க போகலாம்!”

“தென், நான் ரெடி... வைரத்தை எப்பப் பார்க்கலாம்?”

“உடனே புறப்படுங்க!”

“இங்கே கொண்டு வரலையா?”

“இல்லை. நான் என்னையே நம்பலை. என் கடைல பாதுகாப்பா இருக்கு அது. புறப்படுங்க.”

லாரன்ஸ் ஜீவன் ராமோடு ஒருவித உற்சாகத்துடன் புறப்பட்டான். அடுத்த நாற்பது நிமிடங்களில் உஸ்மான் சாலையில் இருக்கும், தனது மிகப் பெரிய நகைக்கடை வாசலில் கண்டெஸா க்ளாஸிக்கை நிறுத்திவிட்டு இறங்கினார் ஜீவன்ராம்.

முக்பக்க ஏஸி ஷோ ரூம் தங்க நகைகளை கஸ்டமர்களுக்கு காண்பித்துக் கொண்டிருக்க -

ஜீவன்ராம் அதைக் கடந்து உள் பக்கமாக நடந்தார். லாரன்ஸ் தொடர்ந்தான்.

நாலைந்து அறைகள் கடந்து, கோடியில் கண்ணாடிக் கதவை அணிந்து கொண்டு ஒரு அறை தென்பட, ஜீவன்ராம் தள்ளித் திறந்தார்.

கனமான மின்சாரக் குளிர் அணைத்துக் கொண்டது.

மறுபடியும் உள்ளே.

லாரன்ஸ் புருவம் உயர்த்தினார்.

நாலைந்து மினி கம்ப்யூட்டர்கள் தன் ரியான் கண்களைச் சிமிட்டிக் கொண்டிருக்க, எலக்ட்ரானிக் கூச்சல் மெலிதாக இருந்தது.

ஒரு கம்ப்யூட்டரை நெருங்கி ஜீவன்ராம் இயக்க –

அது ஏதேதோ எலக்ட்ரானிக் மொழிகளில் பதில் சொன்னது.

சாவி ஒன்று விழுந்தது கீழே.

அதை எடுத்துக் கொண்டு, சுவரோடு பதிக்கப்பட்ட லாக்கரை அடைந்தார் ஜீவன் ராம். திறந்தார்.

உள்ளே கண்ணாடிப் பெட்டி. சுற்றி வரும் லேசர் பீம். என்னவோ செய்து லேசர் கதிரை முடமாக்கிவிட்டு கண்ணாடிப் பெட்டியை எடுத்தார் வெளியே.

'அக்வா எமரால்ட்' அள்ளி இறைத்தது வெளிச்சச் சாரல்களை. அயர்ந்து போனான் லாரன்ஸ்.

இமைக்காமல் பார்த்துக் கொண்டே இருந்தான்.

“உனக்கு சோதனை செய்ய வேண்டுமானால், இந்த கம்ப்யூட்டர் மூலம் இதன் தரத்தை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்!” சொல்லிவிட்டு செய்தும் காண்பித்தார் ஜீவன் ராம்.

சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்தான் லாரன்ஸ்.

“எப்போது நான் எடுத்துக் கொள்ளலாம்?”

“பணம் ரெடியானா இப்பவே. ஆனா கம்ப்யூட்டர் மூலமா நான் ‘பாக்' பண்ணி உங்ககிட்ட தந்தா, கஸ்டம்ஸ் உன்னை எதுவும் செய்யாது!”

தலையசைத்தான் லாரன்ஸ். 'பாக்' செய்து கொள்ளும்படி ஜீவன்ராமிடம் சொன்னான்.

“நான் எங்கே வந்து இதை வாங்கிக் கொள்ளலாம்?”

“அது பிரச்சையில்லை. பாக் பண்ணிட்டா ரிஸ்க் இல்லை. நானே ஹோட்டல்ல கொண்டு, வந்து தரமுடியும். எப்ப உங்களுக்கு திரும்பிப் போக ப்ளைட்?”

“பொருள் வந்துட்டா நாளைக்கே பாம்பே போய், அங்கிருந்து நியூயார்க் போயிரலாம். பணத்தை இன்னிக்கு சாயங்காலம் ரெடியா வச்சிருப்பேன். ஆறு மணிக்கு உங்களை எதிர் பார்க்கலாமா?”

“ஷ்யூர்!”

“எதுல வச்சு வைரம் வரும்?”

“பணம் என் கைக்கு வர்ற வரைக்கும், அதை நீங்க தெரிஞ்சுக்க வேண்டாம். போகலாமா?”

லாரன்சை ஓட்டலில் கொண்டு வந்து விட்ட உடன், இரண்டு கோடி ரூபாய் அட்வான்சாகக் கொடுத்தான் லாரன்ஸ். நம்பிக்கையோடு சிரித்தார் ஜீவன்.

மாலை ஆறு மணிக்கு ஜீவனுக்காக ரிசப்ஷனில் காத்திருந்தான் லாரன்ஸ்.

மணி ஆறரை...

ஏழு...

எட்டு...

ஒன்பதரை...

ஜீவன் வரவேயில்லை.

லாரன்சுக்கு பதறியது. ஜீவன் இரண்டு கோடி ரூபாய்களை வாங்கிக் கொண்டு ஏமாற்றி விட்டாரா?

அவசரமாக டாக்சி பிடித்து, உஸ்மான் ரோட்டில் உள்ள நகைக் கடையில் இறங்கினான்.

விவரம் கேட்டான்.

“அவர் வீட்டுக்குப் போயாச்சே அஞ்சு மணிக்கே!”

“வீடு எங்கே?” குரல் சிதறியது லாரன்சுக்கு.

விலாசம் சொன்னார்கள்.

பதறியடித்துக் கொண்டு அவன் வீட்டை நெருங்கும் சமயம் தான் ஊரைச் சுற்றி விட்டு தன் கரும்பச்சை மாருதியில் வீட்டை நெருங்கினான் ஷ்யாம்.

“ஹலோ லாரன்ஸ்! டாடியைப் பார்க்கணுமா?”

“யெஸ்!”

“எங்கே இருக்கார்னு தெரியலை. சாதாரணமா பதினொரு மணிக்குத் தானே கடையை விட்டுக் கிளம்புவார். உள்ளே வாங்க!”

மாடியேறி டாடியின் அறையை அடைந்தான்.

“இங்கே தான் இருக்கார் மிஸ்டர் லாரன்ஸ் உள்ளே வாங்க! டாடி, மிஸ்டர் லாரன்ஸ் வந்திருக்கார்.”

அருகில் நெருங்கிய ஷ்யாம் அப்போது தான் அவரை கவனித்தான். அலறிவிட்டான்.

நாலைந்து இடங்களில் கத்திக் குத்து வாங்கி, ஏராளமான ரத்தம் பெருக்கி செத்துப் போயிருந்தார் ஜீவன்.

'ஹோ'வென்று அலறினான் லாரன்ஸ்.

*****

2

ஜீவன் இறந்து நாலு முழு நாட்களாகி விட்டது.

திட்டமிட்டு செய்யப்பட்ட அந்தக் கொலையில் கைரேகை, போலீஸ் நாய், போஸ்ட்மார்ட்டம் என்று எதிலுமே ஒரு தடயம் கூட போலீசுக்கு சிக்கவில்லை.

ஷ்யாமை போலீஸ் பல கேள்விகள் கேட்டது. அழுவதைத் தவிர ஒன்றுமே சொல்ல இயலவில்லை அவனால். சம்பவம் நடந்த நாள் காலையில் லிஜிபி வொண்டர் லேன்ட் போனவன், லாரன்ஸ் வரும்போது தானே திரும்பினான்?

லாரன்சால் போலீசில் நிஜத்தைச் சொல்ல முடியவில்லை.

போலீஸ் ஓரளவு ஓய –

“சொல்லுங்க லாரன்ஸ்! என்ன நடந்தது நிஜமா?” ஷ்யாம் கேட்டான் மெல்ல. லாரன்சை பிக்சருக்கே கொண்டுவரவில்லை ஷ்யாம்.

லாரன்ஸ் நடந்த விவரங்களை ஒன்று விடாமல் ஷ்யாமிடம் சொன்னான். “உங்களுக்கு எதுவுமே தெரியாதா?”

“ஸாரி. பிஸினஸ்ல என்னை நுழைக்கிறதில்லை எங்கப்பா. ஸோ, எதுவுமே எனக்குத் தெரியாது. வேணும்னா கடைல போய் பார்த்துடலாம். ஒருவேளை அந்த வைரங்கள் அங்கே இருந்தா மீதிப் பணத்தைத் தந்து, அதை நீங்க எடுத்துக்கலாம்!”